சேலத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறது என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்ன மணலியை சேர்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் அடிமையாக்கி அழிக்கும் என்பதற்கு அங்கமுத்து தான் மோசமான எடுத்துக்காட்டு என்று கூறியுள்ள அன்புமணி, பா.ம.க. நடத்திய போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், அந்தத் தடையை நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், இதற்கான தடையை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.