பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்ததில் அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு புலம்பெயர் இந்தியர்களின் ஆதரவு கிடைக்காமல் போனது ஏன்? விரிவாக பார்க்கலாம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் பிரிட்டனில் வசித்து வருகின்றனர். அதில் 5 லட்சம் பேர் லண்டனில் வசிப்பதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். பிரிட்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் புலம்பெயர் இந்தியர்கள் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்ல… பிரிட்டனில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் கம்பெனிகளை இந்திய வம்சாவளியினர் நடத்தி வருகின்றனர். அதில் 654 நிறுவனங்களின் குறைந்தபட்ச TURN OVER ஆண்டுக்கு ஒரு லட்சம் பவுண்டுகள். ஒரு பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வரி செலுத்தும் இந்திய வம்சாவளியினர் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளனர். இதன் காரணமாக பிரிட்டனின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் புலம்பெயர் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அதிகம். பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கே இதற்கு சிறந்த உதாரணம்.
ஆனால் அந்நாட்டில் எப்போதெல்லாம் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தேவையில்லாமல் இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைப்பது வழக்கம். அதற்கு எடுத்துக்காட்டாக காஷ்மீர் விவகாரத்தில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை குறிப்பிடலாம்.
அவ்வளவு ஏன்? தற்போது பிரிட்டன் பிரதமராகி இருக்கும் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர் கட்சி மாநாட்டில்கூட காஷ்மீர் விவகாரம் எதிரொலித்தது. காஷ்மீரில் மனித உரிமை தொடர்பான சிக்கல்கள் உள்ளன என்றும், காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தது தொழிலாளர் கட்சி.
அதே மனநிலையோடு இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்திருக்குமா என்று தெரியாது. ஆம்… புலம்பெயர் இந்தியர்களின் வாக்குகளை கவரும் வகையில் தங்கள் கட்சியின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார் கெய்ர் ஸ்டார்மர். இந்துக்கள் மீதான வெறுப்பு பரப்புரைக்கு கண்டனம் தெரிவித்த அவர், வாக்கு சேகரிப்பின் போது இந்து கோயில்களுக்குச் சென்றார். இந்தியா உடனான நட்புறவு வலுப்படுத்தப்படும் என்றும் ஸ்டார்மர் அறிவித்தார். அவரது இந்த நடவடிக்கைகள், காஷ்மீர் விவகாரத்தில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் Jeremy Corbin-னின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை மறக்கச் செய்யும் வகையில் இருந்தன.
மேலும் ஒட்டுமொத்தமாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற
தொழிலாளர் கட்சிதான் இந்திய வம்சாவளி எம்.பி.களையும் அதிகமாக நாடாளுமன்றத்துக்கு கொடுத்துள்ளது.
அந்த கட்சியை சேர்ந்த சீமா மல்கோத்ரா, வலேரி வாஸ், லிசா நண்டி ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பிரிட்டனை சேர்ந்த சீக்கியரான பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி ஆகியோரும் தேர்தலில் வென்றுள்ளனர்.
தற்போது கெய்ர் ஸ்டார்மர் பிரதமராகி இருப்பதால் பிரிட்டன் – இந்தியா இடையே பேச்சுவார்த்தையில் இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், விசா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு, கல்வி, காலநிலை மாற்றம் போன்றவற்றில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு போன்றவை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.