அதிமுகவை அழிவுப்பாதைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்துச் செல்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம் என பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர் என கூறியுள்ளார்.
அதிமுக-வை அழிவுப் பாதைக்கு எடப்பாடி பழனிசாமி அழைத்து சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தொடர் தோல்வியை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை என்றும் கூறியுள்ளார்.
தான் எந்த நேரத்திலும் கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்காத நிலையில், தம்மை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளதெனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தாமாக பதவி விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும் பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.