நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்த வலியுறுத்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளநிலை மருத்துவப் படிப்புக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தெளிவான நிலையில், இந்த முறைகேட்டின் மூலம் எத்தனை மாணவர்கள் பயன்பெற்றனர் என்றும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், நீட் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, இதுவரை மேற்கொண்ட விசாரணையின் நிலவரத்தை அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த பிரத்யேக கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த கமிட்டியின் விவரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றும்,
அதில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதை தாங்கள் தெரிவிப்போம் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.