இந்தியா- ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மாஸ்கோவிலுள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார்.
ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி மாஸ்கோ சென்றுள்ளார்.
அவரை விமான நிலையத்தில் ரஷ்யாவின் முதல் துணை பிரதமரான டெனிஸ் மாண்டுரோவ் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து மாஸ்கோவில் உள்ள ஹோட்டலுக்கு சென்றடைந்தார். ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோ பிரதமர் மோடியை ஒரே காரில் ஹோட்டல் வரை அழைத்து சென்றார்.
இதையடுத்து, ரஷ்ய அதிபரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, 3-வது முறையாக இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, ரஷ்ய அதிபர் புதின் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்திய மக்களுக்கு சேவை செய்ய பிரதமர் மோடி தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டினார்.