கும்மிடிப்பூண்டியில் ராஜ்குமார் என்பவர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி அவரது குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் தீக்குளித்த நிலையில் சென்னை கேஎம்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகன் ராஜ்குமாரின் சடலத்தை வாங்க மறுத்து தாய் கல்யாணி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜ்குமார் உயிரிழப்புக்கு நியாயம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாய் கல்யாணி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், கும்மிடிப்பூண்டி முன்னாள் வட்டாட்சியர் ப்ரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா ஆகிய மூவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பத்துக்கு மேற்பட்டவர்களின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.