தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் வன்முறைகள் தொடர்பாக இன்று தேசிய எஸ்சி ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்று புகார் கொடுக்க உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாகியுள்ளன.
சென்னையில் இரு தினங்கள் முன்பு பட்டியலின தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். இதுதான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலைமை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.
10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தனர். இதில் 40 பேர் பட்டியலின மக்கள். ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜூன் கார்கேவோ யாரும் அந்த மக்களை சந்திக்கவில்லை. ஹாத்ராஸுக்கும் மற்ற இடங்களுக்கும் செல்லும் ராகுல் காந்தி, கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தவை குறித்து ராகுல் காந்திக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் செல்லவில்லையா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேலம் அருகே சுதா என்ற பஞ்சாயத்து தலைவர் குடியரசு விழாவில் தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுக்கப்பட்டது.
திமுக அமைச்சரான பொன்முடி பொது நிகழ்வு ஒன்றில் பெண் ஒருவரிடம் ‘எந்த சாதி’ என்று கேட்டார். திமுகவில் சீனியர் அமைச்சர் பொன்முடி. அவர் பொது நிகழ்வில் பட்டியலின பெண்ணிடம் எந்த சாதி என்று கேட்கிறார். தமிழகத்தில் தீண்டாமை நிலவுகிறது. இந்த மாதிரியான சாதிய பாகுபாடுகள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
பட்டியலின தலைவர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் திமுக ஆட்சியில் எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்கள் தினம் தினம் தீண்டாமையை எதிர்கொள்கின்றனர்.
சமூக நீதி காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, அதனை முறையாக பின்பற்றவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு இனி சமூக நீதியைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
ஆம்ஸ்ட்ராங் நகரின் மையப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்படியெனில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது.
சட்டம் ஒழுங்கில் திமுக அரசு படுதோல்வி கண்டுள்ளது. திமுக அரசில் நிகழ்ந்துள்ள பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக இன்று தேசிய எஸ்சி ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் சென்று ஆதாரங்களுடன் புகார் கொடுக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.