தொடர்ந்து, மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றதும், தனது முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு சிறந்த முறையில் இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம், புவிசார் அரசியலில் இந்தியாவின் ராஜ தந்திரமாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2022ம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக ரஷ்யா பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த ரஷ்ய பயணம், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவுடன் வெளிப்படையாக பேச விரும்புவதாக கூறியுள்ள அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு குறித்த கவலைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், ஐநா சாசனத்தின் படி நடந்து கொள்ளுமாறும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கமாறும் ,ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி அறிவுரை சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்தே உலகின் புவிசார் அரசியலில் பெரும் மாற்றங்கள் வந்துவிட்டன. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விதித்தன. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்திய நிலையில், சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்த பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், இந்தியா தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கியது ரஷ்யாவுக்கு உதவியாக இருந்தது.
சமீப காலமாகவே ரஷ்யா, சீனாவுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சீனாவுக்குப் பெரும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.
கடந்த மே மாதம், ரஷ்ய அதிபரின் பெய்ஜிங் பயணத்தை தொடர்ந்து, கடந்த புதன் கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் சந்தித்ததன் மூலம் ரஷ்யா சீனாவுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்தது.
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பிரதமர் மோடி ரஷ்யா சென்று அதிபர் புதினை தற்போது சந்தித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு சிறப்பு மரியாதை வழங்கப் பட்டது. ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் Vnukovo-II விமான நிலையத்துக்கே நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணத்தின் போது அவரை வரவேற்ற துணைப் பிரதமரை விட டெனிஸ் மந்துரோவ் அதிக அதிகாரம் மிக்க பதவியில் இருக்கிறார். இதுவே சீனாவை விடவும் இந்தியாவின் உறவு தனக்கு முக்கியமானது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அதிபர் புதின் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரஷ்யாவுக்குப் பொருளாதார தடையிலிருந்து மீள முக்கிய மாற்று வழியாக இந்தியா இருப்பதை ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி உணர்த்தி இருக்கிறார். அவரும் சீனாவை மட்டுமே நம்புவது சரியாக வராது என்பதால், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவே விரும்புகிறார்.
மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தால் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் நீர்த்துப்போகின்றன என்ற சந்தேகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதும் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் நோக்கம் என்று முன்னாள் வெளியுறவு செயலாளரும் ரஷ்யாவுக்கான தூதருமான கன்வால் சிபல் கூறியிருப்பது கவனிக்க வேண்டிய கருத்தாகும்.
2020ம் ஆண்டு எல்லை பகுதியில் சீனாவுடனான மோதலுக்குப் பின் ரஷ்யாவுடனான வலுவான உறவுகள் இந்தியாவிற்கு இன்றியமையாத தேவையாக இருக்கிறது. சீனாவின் கூட்டாளியாக ரஷ்யா மாறுவது சீனாவின் ஆதிக்க போக்கு அதிகரிக்கவே உதவும் என்பதால் பிரதமர் மோடி, தனது சாதுரியத்தால் தடுத்திருக்கிறார்.
தெற்காசியா முழுமைக்கும் செல்வாக்கு செலுத்தும் போட்டியில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே களத்தில் நிற்கின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் சீனாவின் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கும் இந்தியாவின் உதவி பிற நாடுகளுக்குத் தேவைப்படுகிறது.
புவிசார் அரசியல் பரிமாணங்களை மாற்றும் விதமாக பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் அமைந்திருப்பதாக வியூகவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுதங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு நாடுகளுடன் நட்பை பேணுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதால் ரஷ்யாவுடனான தொடர்பை இந்தியா தொடர விரும்புகிறது என்பதையும் இந்த பயணம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா ரஷ்யாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டுவது, வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்றவை சீனாவையும் மேற்கத்திய நாடுகளைக் கவலையடைய வைத்துள்ளது என்பது தான் உண்மை.