குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, அவமானப்படுத்தி விட்டதாக
மிகவும் வருத்தப்பட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி வழி வந்ததாக கூறும் செல்வப்பெருந்தகை மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள் உள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா செல்வப்பெருந்தகை? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? என்றும், செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து தான் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் தனக்கில்லை என்றும், செல்வப்பெருந்தகை எங்கு வழக்கு தொடர்ந்தாலும் அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன் என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.