காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரியின் குறுக்கே 5 ஆயிரத்து 192 கோடி ரூபாய் மதிப்பில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அரசின் ஜல்சக்தித்துறை பதில் அளித்துள்ளது.
அதன்படி காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.