மும்பையில் BMW கார் விபத்தில் தொடர்புடையவரும் அவரது குடும்பத்தினரும் சினிமா பாணியில் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒரு தம்பதி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் கணவர் பிரதீப் நகாவா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தப்பித்தாலும், மனைவி காவேரி காரின் BONNET-ல் சிக்கிக் கொண்டார். கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அவரை இழுத்துக் கொண்டே சாலையில் வேகமாகச் சென்றது அந்த கார். வியாபாரத்துக்காக மீன் வாங்கிக் கொண்டு கணவருடன் சென்ற தமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என காவேரி நினைத்திருக்க மாட்டார். இந்த கொடுமை நிகழ்ந்தது ஜூலை ஏழாம் தேதி.
காவேரி மீது அதிவேகமாக மோதிய காரை ஓட்டிய இளைஞரின் பெயர் மிஹிர் ஷா. அவரது தந்தை ராஜேஷ் ஷா, மகாராஷ்ட்ர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். பணபலமும் அதிகார பலமும், மதுவும் கொடுத்த மயக்கத்தில் சொகுசுக் காரை அதிவேகமாக இயக்கி இருசக்கர வாகனத்தை அடித்து தூக்கியுள்ளார் மிஹிர் ஷா.
அப்போது CAR BONNET-ல் சிக்கிய காவேரியை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு, உயிருக்கு போராடிய காவேரியை BONNET-ல் இருந்து விடுவித்து சாலையில் கிடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மிஹிர் ஷாவுக்கு பதிலாக உடன் இருந்த அவரது ஓட்டுநர் காரை இயக்கியுள்ளார். பின்னர் ரிவர்ஸ் எடுக்கும் போது காவேரி மீது காரை ஏற்றியுள்ளனர். பிறகு மற்றொரு காரில் மிஹிர் ஷா அங்கிருந்து தப்பியுள்ளார்.
கோரேகானில் உள்ள காதலி வீட்டுக்கு மிஹிர் ஷா சென்றவுடன், அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு வந்த மிஹிர் ஷாவின் சகோதரி வேறோரு காரில் அவரை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மிஹிர் ஷா, அவரது தாய், இரண்டு சகோதரிகள், நண்பர் என 5 பேரும் மும்பையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாபூரில் இருக்கும் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மிஹிர் மட்டும் தனது நண்பருடன் மும்பையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தானேவின் விரார் பகுதிக்கு சென்று பதுங்கியுள்ளார்.
ஐவரும் செல்போன்களை OFF செய்துவிட்டனர். மிஹிர் நண்பரின் போனை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை அதிகாலை மிஹிரின் நண்பர் தனது போனை 15 நிமிடத்துக்கு ஸ்விட்ச் ஆன் செய்ததால் அவர்களது மறைவிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து மிஹிர் ஷா உட்பட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மிஹிர் ஷாவுக்கு 16-ஆம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மிஹிரின் தந்தை ராஜேஷ் ஷா ஜாமீனில் வெளிவந்துள்ளார். எனினும் அவர் சிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மிஹிர் ஷாவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என காவேரியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீன் வியாபாரியான காவேரியின் கணவர் பிரதீப் நகாவாவின் கதறல் அரபிக்கடல் அலையோசையையும் தாண்டிக் கேட்கிறது. காவேரி குடும்பத்தினரின் கண்ணீருக்கு நியாயம் கிடைத்தால் சரி.