உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2-ஆம் தேதி சாமியார் ஹோலே பாபா சொற்பொழிவு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அப்போது ஹோலே பாபா சாமியாரின் காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி விசாரணை நடத்த கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஹத்ராஸ் சம்பவம் வேதனை அளிக்கக் கூடியது என்றும், இதுபோன்ற பொதுநல மனுக்களை மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுமாறும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.