அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது விரைந்து செயல்பட்ட காவல்துறையினருக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு ட்ரம்ப் தனது Truth தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு விரைந்து செயல்பட்ட பாதுகாப்புப்படையினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுபோன்று நடப்பதை நம்பமுடியவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார். பேரணியில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும், பலத்த காயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் மீதான தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் ஒருபோதும் வன்முறைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும், விரைவில் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும், ஜோ பைடன் தெரிவித்தார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த சமயத்தில் ட்ரம்ப்புக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது விரைந்து செயல்பட்ட உளவுத்துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்றும், ட்ரம்ப்பிற்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் பராக் ஒபாமா கூறியுள்ளார்.