ஷெங்கன் விசாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 2023-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு 109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.
25 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உள்பட 29 தேசங்களை உள்ளடக்கிய பகுதி ஷெங்கன் நாடுகள் என்றழைக்கப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட 29 நாடுகளுக்கு ஐரோப்பியர் அல்லாதோர் செல்வதற்காக வழங்கப்படுவதே ஷெங்கன் விசா.
இதனைக் கொண்டு வெளிநாட்டில் வேலை செய்ய முடியாது. இந்த விசாவை பயன்படுத்தி 180 நாட்களில் அதிகபட்சமாக 90 நாட்கள் ஷெங்கன் நாடுகளில் தங்கலாம். அதற்கு மேல் இருந்தால் அபராதம், நாடு கடத்தல், ஷெங்கன் நாடுகளுக்குள் நுழையத் தடை போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஷெங்கன் விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் ஷெங்கன் விசாவுக்கான கட்டணம் 12 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2023-ஆம் ஆண்டில் இந்தியர்கள் எத்தனை பேருக்கு ஷெங்கன் விசா கிடைத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 9 லட்சத்து 66 ஆயிரத்து 687 இந்தியர்கள் கடந்தாண்டு ஷெங்கன் விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 752 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்காரணமாக 109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஷெங்கன் விசாவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்காக செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாது. 2023-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10 கோடியே 32 லட்சத்து 7 ஆயிரத்து 572 பேர் ஷெங்கன் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் ஒரு கோடியே 63 லட்சத்து இரண்டாயிரத்து 984 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது மொத்த விண்ணப்பங்களில் 15 புள்ளி 81 விழுக்காடு. இதன் மூலம் விசா வழங்காமலேயே ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஷெங்கன் நாடுகளுக்கு கிடைத்துள்ளது.
இந்தியர்களை பொறுத்தவரை ஸ்விட்சர்லாந்துக்கு செல்வதற்காகவே ஷெங்கன் விசாவுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதே போல் இந்தியர்களின் விண்ணப்பங்களை அதிகம் நிராகரித்த நாடாக பிரான்ஸ் இருக்கிறது. பயண நோக்கம் தெளிவாக இல்லாதது, போதிய ஆவணங்கள் இல்லாதது, கடந்த காலங்களில் விசா கட்டுபாடுகளை மீறியது போன்றவையே ஷெங்கன் விசா நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள்.
விசா நிராகரிப்பு மூலம் ஏற்படும் பண இழப்பை தவிர்க்க பயண காப்பீடு செய்வது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் ஷெங்கன் விசா நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய கட்டணத்தை இழப்பீடாக பெறும் வகையில் சில பயண காப்பீடு திட்டங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.