ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ல் உள்ள பிரிவு 55-ன் கீழ் திருத்தப்பட்ட விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரிவு 55 என்பது ஆளுநரின் அதிகாரத்தை பற்றியது. அதன்படி காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிப்பதற்கு கவர்னரின் ஒப்புதல் தேவை.
மேலும் அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான முன்மொழிவை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை தலைமைச் செயலாளர் மூலம் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும். அதே போல் வழக்கு தொடர அனுமதி வழங்குவது, மறுப்பது, மேல்முறையீடு செய்து போன்றவற்றுக்கும் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். சிறைச்சாலைகள், வழக்கு விசாரணை இயக்குநரகம் மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்திருத்தத்துக்கு தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் தள்ளிப்போவதற்கான மற்றுமொரு அறிகுறி இது என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதிகாரமற்ற, தன்னுடைய உதவியாளரை நியமிக்கக் கூட துணைநிலை ஆளுநரிடம் கைகட்டி கெஞ்சும் ரப்பர் ஸ்டாம்ப் முதலமைச்சரை விட ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் தகுதியானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முஃப்தி, நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த சட்டப்பேரவையைாக இருந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மத்திய அரசு நகராட்சியாக மாற்ற விரும்புகிறது என்றும் அதைத்தான் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதோடு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை பிரிக்கப்பட்டு
யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் மத்திய அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.