இன்னும் சில நாள்களில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இதற்கு முன்பு இந்தியா வென்ற பதக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒலிம்பிக் போட்டிகள் 27 நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக கூறுகிறது வரலாறு. கிறிஸ்து பிறப்பதற்கு 776 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா என்ற நகரத்தில் முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றதாம். கிரேக்கர்களின் கடவுளாக கருதப்படும் ஜீயஸ் மற்றும் ஹேரா ஆகியோரை வழிபட்டு அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
அக்காலத்தில் போர்க்கலையாகவும், அன்றாட வாழ்வில் கேளிக்கையாகவும் இருந்த சிலவற்றை தொகுத்து விளையாட்டு போட்டிகளாக மாற்றி முதல் ஒலிம்பிக் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்ட ஒலிம்பிக்ஸ், பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல நாட்கள் நடத்தப்படும் போட்டியாக மாறியது.
நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆயிரத்து 896-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. அதற்கு காரணமானவர் பியரி டி கூபர்டின் (PIERRE DE COUBERTIN). இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர்தான். ஒலிம்பிக் வரலாறு இவ்வாறு இருக்க, அதில் இந்தியாவின் பங்கு என்னவென்று பார்ப்போமா???
ஆயிரத்து தொள்ளாயிரமாம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா முதன்முதலாக கலந்து கொண்டது. 26 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இதில் வியப்பு என்னவென்றால் அந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டது ஒருவர் மட்டுமே. அந்த ஒற்றைப் போட்டியாளர், பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். கொல்கத்தாவில் பிறந்த NORMAN PRITCHARD என்பவரே அவர். ஆண்கள் 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும், 200 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் கலந்து கொண்ட நார்மன் இரண்டிலும் வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாடு என்ற வரலாற்றை இந்தியா படைத்தது.
எனினும், அதற்கடுத்து 1904, 1908 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கவில்லை. 1916-ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் காரணமான ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு 1920 மற்றும் 1924-ல் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கவில்லை.
இருப்பினும் 1928-ஆம் ஆண்டு போட்டியில் தமது முதல் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் இந்திய ஹாக்கி அணி சாதனை படைத்தது. ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவும், பி பிரிவில் இடம்பெற்ற நெதர்லாந்தும் இறுதிப் போட்டியில் மோதின. லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது இந்தியா.
இருந்தாலும் அணியில் சில சிக்கல்கள் இருந்தன. உதாரணமாக லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய தயான்சந்த், சவுகத் அலி ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது, காயம் காரணமாக பெரோஸ்கான் வெளியேறியது என சில பின்னடைவுகள். 1928-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கியது நெதர்லாந்து அணி.
உடல்நிலை மோசமாக இருந்த போதும் இந்தியாவுக்காக களமிறங்கினார் தயான்சந்த். அவர் அடித்த 3 கோல்களைக் கொண்டே நெதர்லாந்தை மூன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டித் தூக்கியது இந்தியா. அதன் பிறகு தொடர்ந்து 6 முறை ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்கள் நம் வீரர்கள்.
2020-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளில் 10 தங்கம் உட்பட 35 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. கோடிக்கணக்கில் இருக்கும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இது மிக மிக மிகக்குறைவு. இனியாவது ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் இந்திய வீரர்கள் வெற்றிகளை குவிப்பார்கள் என்று நம்புவோம்.