பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆடு, மாடு வெட்டிய திமுகவினரின் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜகவின் தோல்வியை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை படத்துடன் ஆடு, மாடு வெட்டி திமுகவினர் கொண்டாடினர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக ஏற்காடு ஏ. மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தரப்பில் வாதிட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர், இதுபோன்ற சம்பவங்கள் கிரிமினல் குற்றம் மட்டுமல்லாது, விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும் என தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் என வாதிட்ட அவர், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விஷயங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக அரசு ஒரு வார காலத்திற்குள் இந்த மனு மீது பதிலளித்த வேண்டும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தது.