திருநெல்வேலி மாநகராட்சியில் 55 லட்ச ரூபாய்க்கு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் பொறுப்பு மேயர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் 45-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பேரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட 192 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் ரம்சான் அலி பேசுகையில், “ஆணையரின் அனுமதியின்றி 55 லட்ச ரூபாய்க்கு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது” என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த ஆணையர், “சுகாதார அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.