அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீதஒதுக்கீட்டை தமிழக அரசு சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சேவை அடிப்படையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது தற்போது, ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் மாநில செயலாளர் அகிலன், “சேவை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது சமூக நீதிக்கு எதிரானது” என்றார்.
மேலும், “தமிழக அரசின் தவறான நடவடிக்கையால், கிராமபுறம் மற்றும் மலைப்பகுதியில் சிறப்பு மருத்துவ சேவை பாதிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
















