டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க முன்னாள் அதிபர்கள் யார்? யார்? என்று பார்க்கலாம்.
ASSASSIN… பணத்துக்காகவோ, பிற காரணங்களுக்காகவோ முக்கிய தலைவர்களை கொலை செய்யும் நபரை இவ்வாறு அழைப்பார்கள். பல திரைப்படங்களில் இந்த சொல்லையும் இது தொடர்பான காட்சிகளையும் பார்க்க முடியும். அப்படி ஒரு அதிர்ச்சி தரும் நிகழ்வை நேரில் கண்டார்கள் பென்சில்வேனியா மக்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பென்சில்வேனியாவில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திடீர் திருப்பமாக சீறிப்பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு ட்ரம்பின் காதை காயப்படுத்தியது. இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக ட்ரம்ப் பிழைத்துவிட்டார். அவருக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அதிபர்களும், முன்னாள் அதிபர்களும், தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர்களும் தாக்கப்படுவதோ, கொல்லப்படுவதோ புதிதல்ல.
அவ்வளவு ஏன், கறுப்பின அடிமை முறையை ஒழித்து அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஆப்ரஹாம் லிங்கனையே சுட்டுக்கொன்றார்கள். 1865-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அந்த படுகொலை நிகழ்ந்தது. பதவியில் இருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்தான்.
அடுத்த கொலை 1881-ஆம் ஆண்டு நடந்தது. இருபதாவது அமெரிக்க அதிபரான JAMES ABRAM GARFIELD, தலைநகர் வாஷிங்டன்னில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1901-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் WILLIAM McKINLEY நியூயார்க்கில் கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு பொதுமக்களுடன் கை குலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் POINT – BLANK முறையில் அதாவது அருகில் இருந்தே WILLIAM McKINLEY-ஐ சுட்டுக் கொன்றார்.
1963-ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஜான் F கென்னடி, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள DALLAS நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது LEE HARVEY OSWALD என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜான் F கென்னடியின் சகோதரர் ராபர்ட் F கென்னடியும் 1968-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இவர்கள் 5 பேரும் உயிரிழந்த நிலையில் தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களும் இருக்கிறார்கள்.
1912 ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் களமிறங்கினார். பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நெஞ்சை நோக்கி சுடப்பட்ட குண்டு, சட்டப்பையில் இருந்த காகித கட்டு மற்றும் கண்ணாடி மீது பட்டதால் தியோடர் ரூஸ்வெல்ட் தப்பினார். தாக்குதலுக்கு பிறகும் அவர் தமது உரையை தொடர்ந்தார்.
1933-ல் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் உயிரிழந்தார். 1950-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 33-ஆவது அதிபரான HARRY S. TRUMAN-ஐ கொல்லவும் முயற்சி நடந்தது.
1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட GEORGE C WALLACE மீது மேரிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த WALLACE தமது வாழ்நாள் முழுவதையும் படுக்கையிலேயே கழித்தார்.
1975-ஆம் ஆண்டு 38-ஆவது அதிபர் GERALD FORD-ஐ கொல்ல 17 நாட்கள் இடைவெளியில் இரண்டு பேர் முயற்சித்தனர். அதில் அவர் தப்பிவிட்டார்.
1981-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மீது வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ரீகன் பலத்த காயமடைந்தார்.
2005-ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டுக்குச் சென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் GEORGE W. BUSH மீது கையெறி குண்டு வீசப்பட்டது. எனினும், அது வெடிக்காததால் BUSH-ம் ஜார்ஜியா அதிபரும் உயிர்தப்பினர்.