முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமண விழா பற்றிய பேச்சு இந்தியாவில் மட்டுமில்லை சர்வதேச அளவிலும் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மைக்காலமாக இந்தியாவில் ஆடம்பர திருமணங்கள் அதிகரித்திருப்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது.
இந்த ஆடம்பரத் திருமண விழாவின் தொடக்கமே , சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் சூழ்நிலையில் பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக காஷ்மீருக்குச் சென்றிருந்தார்.
அப்போது தான், வெட் இன் இந்தியா’ (Wed in India) – இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் இதுவே தனது அடுத்த முழக்கம். என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியர்கள் தங்களது ஆடம்பர திருமணங்களை இந்தியாவில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்தியத் திருமணத் துறை மிகப் பெரிய வர்த்தகத் துறையாக உள்ளது. இந்தியத் திருமணத் துறை ஆண்டுதோறும் 7முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சியடைந்து வருகிறது. 2023-2024 ஆம் ஆண்டு திருமணக் காலங்களில் இந்திய திருமண வர்த்தகம் 75 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய திருமணத் துறையின் மதிப்பு 130 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 681 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய உணவு மற்றும் மளிகை வர்த்தகத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய துறையாக இந்திய திருமணத் துறை உள்ளது.
இந்தியக் குடும்பங்களில் கல்விச் செலவுகளை விட திருமணத்துக்கே அதிகம் செலவாகின்றன. சராசரியாக இந்தியத் திருமணத்துக்காக சுமார் 13 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இது ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரையிலான செலவை விட இரு மடங்கு ஆகும். அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியத் திருமண விழா செலவு மிக அதிகமானதாக இருக்கிறது.
இது குறித்த ஒரு ஆய்வறிக்கையை Jefferies ஜெஃப்ரிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன் படி, அமெரிக்காவை விட இந்திய திருமணத் தொழில் இரு மடங்கு பெரியதாக விளங்குகிறது. ஆனாலும் சீனாவை விட குறைவாகவே உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான திருமணங்கள் நடக்கின்றன. அதே வேளை,சீனாவில் சுமார் 80 லட்சம் திருமணங்களும், அமெரிக்காவில் சுமார் 25 லட்சம் திருமணங்கள் நடக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
பெரும்பாலும் கலாச்சாரப் பாரம்பரிய இந்திய திருமணங்கள் குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை நடத்தப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுற்றம் சூழ ஒரு ஆடம்பர விழாவாகவே இந்திய திருமணங்கள் நடை பெறுகின்றன.
இந்தியாவில் பணக்காரர்களும் பிரபலங்களும் சராசரியாக ஒரு திருமணத்துக்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள்.
குறைந்த பட்சம் 500 விருந்தினர்கள் கலந்து கொள்ள நடைபெறும் இந்த திருமணங்களில்,விருந்தினர்களுக்கான உயர்ந்த தங்கும் வசதிகள், உயர் ரக விருந்தோம்பல் சார்ந்த உணவு வகைகள், திருமண விழா மேடை அலங்காரங்கள் மற்றும் மங்கள இசை, இசை கலைஞர்கள் மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகள் ஆகிய செலவுகள் முக்கியமானவை.
மேலும், திருமணம் நடக்கும் இடங்களாக கோவா, உதய்பூர், ஜெய்ப்பூர், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை திருமணம் செய்யும் மணமக்களின் பிரத்யேக விருப்பமாக இருக்கிறது என்றும், சிலர் அயல்நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
2023-24 திருமணத் துறை அறிக்கையின் படி, மக்கள் கவர்ச்சியான இடங்களில் திருமணம் நடைபெறுவதையே விரும்புகிறார்கள். குறிப்பாக destination wedding எனப்படும் புது வகை திருமணங்கள் 2022ம் ஆண்டு 18 சதவீதமாக இருந்தது. இப்போது destination wedding 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் அவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு தனித்துவமான பழக்கவழக்கங்கள், சடங்கு முறைகள் இருப்பதால் , திருமண சடங்குகளுக்கான வர்த்தகமும் வளர்ந்துள்ளது. திருமணச் சடங்குகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அது சார்ந்த வர்த்தகமும் அதிகரித்து வருகிறது.
நகைகள், ஆடைகள், உணவு மற்றும் பானங்கள், புகைப்படம் எடுத்தல், திருமண திட்டமிடல், அலங்காரம் மற்றும் பல போன்ற வகைகளில் திருமணச் செலவுகள் ஏற்படுகின்றன. .
இந்தியாவில், மணப்பெண்ணுக்கு நகைகள் வாங்கும் வகையில் நகை விற்பனை அதிகமாகிறது.மேலும், திருமணச் செலவுகளில் ஆடைகளுக்கான செலவு 10 சதவீதமாகிறது. திருமணத்தில் உணவு செலவுகள் 20 சதவீதம் ஆகிறது. திருமண நிகழ்வு மேலாண்மை சேவை கட்டணம் மட்டும் 15 சதவீதமாகிறது.
2022 முதல் 2023 வரை திருமண வணிகத் துறை ஆண்டுக்கு அதிகபட்சம் 22 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, கூறும் திருமண தொழில் வல்லுநர்கள், மறைமுகமாக திருமணத் தொழில்துறை மற்ற துறைகளையும் வளர்க்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
அதாவது, திருமணத்துக்கு முன்னதாக வீடுகளை புதுப்பிப்பது, பெயிண்ட் அடிப்பது தொடங்கி, தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களைப் பெரும்பாலும் திருமணப் பரிசுகளாக வழங்கப்படுவதால் அதன் விற்பனை களும் அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.
ஆகவே தான், இந்திய பொருளாதாரம் வளர, இந்தியர்கள் தங்கள் திருமணங்களை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் .