ZOMATO-வின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் CEO-வுமான தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு 8,000 கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது. 41 வயதே ஆன ஒருவர் இத்தகைய உயரத்தை அடைந்தது எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பு…!
டெல்லியில் உள்ள பிரபல அலுவலகத்தின் CANTEEN-ல் சாப்பாட்டு நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான ஊழியர்கள் ஒரே நேரத்தில் சாப்பிட வந்ததே அதற்கு காரணம். நெரிசலைத் தாண்டி இதில் வேறு ஒரு சிக்கல் இருந்தது.
அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் என்னென்ன உணவுகள் இருக்கின்றன என்பதை விளக்கும் மெனு கார்டுகளுக்கு பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு வாங்குவதைவிட மெனு கார்டை கைப்பற்றுவதற்கு பெரும் போட்டியே நடந்தது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இரண்டு இளைஞர்கள் நினைத்தனர். CANTEEN-ல் இருக்கும் அனைத்து கடைகளின் மெனு கார்டையும் ஸ்கேன் செய்து INTRA NET-ல் பதிவிட்டால் இந்தப் பிரச்னை இருக்காது என்று அவர்களுக்கு தோன்றியது. குறிப்பிட்ட அலுவலகத்தின் ஊழியர்கள் மட்டும் பயன்படுத்தும் இணையதளமே INTRA NET.
அதில் மெனு கார்டுகளை பதிவேற்றம் செய்தால் ஊழியர்கள் அனைவரும் தங்கள் செல்போனிலேயே அவற்றை பார்க்க முடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்ட இருவரும் தங்கள் யோசனையை அப்படியே செயல்படுத்தினர். அந்த இளைஞர்கள்தான் தீபிந்தர் கோயலும், பங்கஜ் சட்டாவும்.
அவர்களின் செயலுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. நம் அலுவலகத்தில் உள்ள கடைகளின் மெனு கார்டை இணையத்தில் வெளியிட்டதற்கே இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்றால்… ஊரில் இருக்கும் எல்லா உணவகங்களின் விவரங்களையும் ஓரிடத்தில் பதிவிட்டால் எப்படி இருக்கும்? என்று எண்ணினார்கள் தீபிந்தரும் பங்கஜும். அதன்படி அலுவலகப்பணி முடிந்த பிறகு ஒவ்வொரு உணவகத்துக்கும் சென்று மெனு கார்டுகளை சேகரித்து FOODIE BAY என்ற இணையதளத்தில் வெளியிட்டார்கள்.
அந்த வலைத்தளம் டெல்லி வாசிகளின் வரவேற்பை பெற்றதோடு, விளம்பரங்களும் தேடி வந்தன. தங்கள் முயற்சி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞர்கள், FOODIE BAY இணையதளத்தை பிற ஊர்களுக்கும் விரிவுப்படுத்த முடிவு செய்தனர். அவர்களை நம்பி 7 கோடி ரூபாயை ஒரு நிறுவனம் முதலீடு செய்தது. எனினும் FOODIE BAY-ன் பெயரை மாற்ற வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியது. ஏற்கனவே பிரபலமாக இருந்த E BAY இணையதளத்தைப் போலவே FOODIE BAY-ம் இருப்பதால் அதை மாற்றும்படி கூறப்பட்டது.
அதை ஏற்று குறைந்த விலைக்கு கிடைத்த FORKWISE என்ற இணையதளத்தை வாங்கினார்கள். அந்தப் பெயரும் முதலீட்டாளருக்கு பிடிக்காமல் போனதால் 10 ஆயிரம் டாலர் கொடுத்து வாங்கப்பட்டது ZOMATO.COM. டெல்லியில் தொடங்கிய இந்த சேவை பிற பெரிய நகரங்களுக்கும் பரவியது. உணவகங்களை ரேட்டிங் செய்வது, HOTEL-களில் டேபிள் புக் செய்வது போன்ற வசதிகளையும் ZOMATO அறிமுகப்படுத்தியது. வெளி நாடுகளில் கால் பதித்ததோடு உணவு டெலிவரி சேவையையும் கொண்டு வந்தது. தற்போது BLINKIT மூலம் பிற பொருட்களை விநியோகிக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்த ZOMATO-வின் பங்குகள் அண்மைக்காலமாக SHARE MARKET-ல் மாயாஜாலத்தை நிகழ்த்தி வருகின்றன. கடந்த ஓராண்டில் ZOMATO பங்குகளின் விலை 300 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் மூலம் தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பும் 8 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது.
ZOMATO-வின் 36 கோடியே 95 லட்சம் பங்குகளை தம்வசம் வைத்திருக்கிறார் கோயல். டெல்லி ஐ.ஐ.டி. பட்டதாரியான தீபிந்தர்தான் தற்போதைய சூழலில் இந்தியாவின் பணக்கார PROFESSIONAL MANAGER. உணவு இடைவேளையின் போது தோன்றிய ஒரு யோசனை STARTUP-ஆக மாறி இன்று ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமாக மாறியிருக்கிறது. எனவே நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தொடங்குவோம். யார் கண்டார் அடுத்த STARTUP STAR நாமாகக்கூட இருக்கலாம்.