சென்னை மயிலாப்பூர் பகுதியில், குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுவனையும், சிறுமியையும், சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை, குழந்தைத் திருமணம் தொடர்பாக 20 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், மயிலாப்பூரை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும், 9 வயது சிறுமிக்கும், கடந்த 12-ம் தேதி அவர்களது இல்லத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு புகைப்படம் ஒன்று கிடைத்தது. இதனடிப்படையில், மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா தலைமையிலான அதிகாரிகள் சிறுவனின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் இதனை மறுத்த சிறுவனின் பெற்றோர், அதிகாரிகள் புகைப்படத்தை காட்டிய பிறகு ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கெல்லீஸ் பகுதியில் உள்ள குழந்தைகள் நலக்குழு அலுவலத்திற்கு சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.