உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மற்றும் ஜிலாகி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா பகுதியில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சண்டிகரில் வாரம் இருமுறை அசாம் மாநிலம் திப்ருகர் செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நேற்றிரவு 11.20-க்கு புறப்பட்டது.
இன்று மதியம் 1.45 மணி அளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது கோண்டா மற்றும் ஜுலாஹி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பிகவுரா என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்கட்ட தகவலின்படி விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார் என்றும், சிலர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரயில் தடம்புரண்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக செல்ல அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.