கன்னியாகுமரியில் தொழில் அதிபரை தாக்கி 200 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியனூர் பகுதியில் வசித்து வரும் தொழில் அதிபர் மோகன்தாஸ், பைனான்ஸ் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி அனிதா, மகள்கள் ஆர்த்தி, அட்சயா ஆகியோர் உள்ளனர். அனிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டில் இளைய மகள் அட்சயாவும், மோகன்தாசும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், மோகன்தாசை கம்பியால் தாக்கி விட்டு, மகளை கத்தி முனையில் மிரட்டி, 200 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்களையும் கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.