மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர்
இதன் காரணமாக விமான சேவை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இதுதொடர்பாக மத்தய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. என்ன பிரச்னை என்பது கண்டறியப்பட்டுள்ளது; மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. ரயில்வே சேவைகளிலும் எந்த பாதிப்பும் இல்லை தெரிவித்துள்ளார்.