முதன்முறையாக, பாரீஸ் ஒலிம்பிக் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் “K-9” நாய்கள் குழு பாரீஸ் சென்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்த பிரான்ஸ் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டி நாட்களில் தினமும் 30,000 காவல்துறையினர் பாதுகாப்புக்காக பணியில் இருப்பார்கள் என்றும், செய்ன் நதியில் நடக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் மட்டும் 45,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பல்வேறு இடங்களில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) K9 குழுவான உயர்தர நாய்கள் குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
பத்து பேர் கொண்ட K-9 குழுவில் இடம் பெற்றுள்ள, இந்தியாவின் “K-9” நாய்கள் குழு, ஒரு மாதம் முழுவதும் பாரிஸில் ஒலிம்பிக்கைப் பாதுகாக்கும் என்று பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரஃப், அறிவித்திருக்கிறார்.
இந்திய K-9 குழுவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்கள் உள்ளன. ஆறு Belgian Shepherds நாய்கள், , மூன்று German Shepherds, நாய்கள் மற்றும் ஒரு Labrador Retriever நாய் என்ற குழு முதல் முறையாக அயல்நாட்டில் பாதுகாப்புப் பணிகளுக்காக சென்றுள்ளது.
ஒலிம்பிக்கின் போது விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் பல்வேறு இடங்களில் மோப்பம் பிடித்தல் மற்றும் ரோந்து பணியை மேற்கொள்வது ஆகியவை இந்திய “K-9” நாய்கள் குழுவின் கடமைகளாகும்.
ஏற்கெனவே, 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த G-20 உச்சி மாநாட்டில் இந்த நாய்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சர்வ தேச அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.
இந்த நாய்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ITBP), சஷாஸ்த்ரா சீமா பால் (SSB), அசாம் ரைபிள்ஸ் மற்றும் உயரடுக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் உட்பட பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சேர்ந்த 17 பணியாளர்கள் (CAPFs) ஒலிம்பிக் பாதுகாப்புப் பணிகளுக்காக பாரீஸ் சென்றுள்ளனர்.
ஒவ்வொரு நாயும் மிகுந்த அதன் தனித்துவமான திறமைகளின் அடிப்படையில் விரிவான பயிற்சிகள் மற்றும் தகுந்த சோதனைகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளன. பாரிஸுக்குப் புறப்படுவதற்கு முன் இந்திய மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு இடையேயான நாய் படைகளின் முதல் வகையான ஒத்துழைப்புக்காக 10 வார சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டுக்கு, Belgian Shepherds நாய்கள், நக்ஸலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சுறுசுறுப்பு, கூர்மையான அறிவு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற Belgian Shepherds சர்வதேச அளவில் பல நாட்டு சிறப்புப் படையினரால் பெரிதும் விரும்பப்படுகிறது.
பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக, ஒலிம்பிக் விளையாட்டுகள் மைதானத்தில் தொடங்கப்படாமல், செய்ன் நதியில் தொடங்குகிறது. இவ்விழாவில், 206 வெவ்வேறு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களை ஏற்றிச் செல்லும் படகுகள், நதியியில் ஆறு கிலோமீட்டர் நீளத்தை 18 பாலங்களை கடந்து வரும் பெரிய அணிவகுப்பாக வர உள்ளது.
எனவே , இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், 10 பேர் கொண்ட K9 நாய்கள் குழு மற்றும் 17 பணியாளர்கள் பாரீஸ் ஒலிம்பிக் பாதுகாப்பை வழங்க உள்ளனர். இந்திய K9 குழு வெளிநாட்டில் இதுபோன்ற பணிகளைச் செய்வது இதுவே முதல் முறை என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.