தூங்கா நகரமான மதுரை விருந்தினரை அன்போடு வரவேற்று உபசரிப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தாம் தொழில்நுட்பத்தை உறுதியாக நம்புபவராக இருந்தாலும், அதனால் நேரிட்ட சில விளைவுகளை சந்திக்க நேரிட்டதாக வேதனை தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த டி.ஒய்.சந்திரசூட், மதுரை மக்களின் அன்பால்தான் தாம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார்.
மதுரையில் கடைகள் எப்போதும் திறந்தே இருப்பதால், அதைத் தூங்கா நகரம் என்று கூறுவதாகவும், மதுரைக்கு வரும் அனைவரையும் உபசரிப்பதன் மூலம் இந்நகரின் விருந்தோம்பல் வெளிப்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வு மதுரையில் இடம்பெற்றது எந்தவொரு வியப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.