சீனா, ரஷ்யா கூட்டு கடற்படை போர் பயிற்சியால் மூன்றாம் உலகப் போர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பின்னணி காரணம் என்ன? இது பற்றி பார்ப்போம்.
தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங்கில் உள்ள கடற்படைத் துறைமுகத்தில் சீனா- ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சிகள் தொடங்கி இருக்கின்றன.
இரு கடற்படைகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதிலும் தங்கள் திறமைகளை மேம்படுத்தவே இந்த கூட்டுப் பயிற்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சிகளில் ஏவுகணை எதிர்ப்புப் பயிற்சிகள், கடல் தாக்குதல்கள் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய இடம் வகிக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்புப் படைகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை , இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக மேற்கு மற்றும் வடக்கு பசிபிக் பெருங்கடலுக்கு சென்றதாக சீன இராணுவத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
சீனா-ரஷ்யா கடற்படை பயிற்சிகளின் தன்மை, அமெரிக்க தலைமையிலான ராணுவக் கூட்டு பயிற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று தெரிவித்திருக்கும் சீன ராணுவம், இந்த கூட்டுப் பயிற்சியை, பிற நாடுகளுக்கு எதிரானது என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
எனினும், சீனா-ரஷ்யா கடற்படை ஒத்திகை மேற்குலக நாடுகளுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. காரணம் , கடந்த வாரம் நேட்டோ உச்சி மாநாட்டில் சீனாவைச் நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டிய பின்னணியில் இந்த கூட்டுப் பயிற்சிகள் நடந்திருப்பது தான்.
கடந்த வாரம் வாஷிங்டனில் 32 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா , நியூசிலாந்து ஆகிய நாடுகள், இந்திய பசிபிக் கடல்பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் பற்றி கவலை தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக, நேட்டோ உச்சி மாநாட்டின் இறுதியில் ஒரு தீர்மான அறிக்கை வெளியிடப் பட்டது. ரஷ்யாவுக்கு சீனா தீவிரமான உதவியாளராக மட்டும் இன்றி ரஷ்யாவின் எடுபிடியாகவே மாறிவிட்டது என்று நேட்டோ அறிக்கை குற்றம் சாட்டி இருந்தது.
சீனாவைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததோடு, ரஷ்யா உடனான சீனாவின் உறவை வரம்பில்லாத கூட்டணி என்றும், சீனா, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு எல்லா வகையிலும் உதவி செய்கிறது என்றும், உக்ரைன் போரை தூண்டுவதே சீனா தான் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேட்டோவின் இந்த அறிக்கைக்கு உடனடியாக சீனா மறுப்பு தெரிவித்திருந்தது. ஐரோப்பாவில் நடத்தும் போரை ஆசியாவுக்குள் கொண்டுவர வேண்டாம் என்றும், ஆசியாவில் குழப்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும் நேட்டோ அமைப்பை சீனா எச்சரித்தது.
ரஷ்யாவுடனான சீனாவின் வர்த்தகம் முறையானது மற்றும் நியாயமானது மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அடிப்படையாகக் கொண்டது என்று சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியிருக்கிறார்.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு என்பது மற்ற நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்துவதில் இருந்தே இருந்து வருகிறது என்று கூறிய லின் ஜியான், நேட்டோ அமைப்பின் விரிவாக்கம் என்பது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று ரஷ்யாவின் வாதத்தை நியாயப்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு , உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்தே சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக மாறியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான நல்லுறவையும் முறித்துக் கொண்டது சீனா.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவுடனான வர்த்தக தொடர்பை பெருமளவு சீனா வளர்த்திருக்கிறது. அதன் காரணமாக, தம் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை ரஷ்யா ஓரளவு ஈடு கட்டி வருகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமிக்க துடிக்கும் சீனா, ரஷ்யாவுடனான கூட்டு கடற்படை பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது மூலம் 3ம் உலகப் போர் பற்றிய விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.
தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் உரிமை கொண்டாடி வரும் சீனா, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.
தைவானை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதும் சீன அரசு,சமீப காலமாக, தைவானை அச்சுறுத்தும் வகையில், ராணுவ ஒத்திகைகளைச் தைவான் எல்லை பகுதியில் பலமுறை நடத்தி உள்ளது.
உக்ரைனில் ரஷ்யர்களுக்கு ஆதரவு, தென் சீனக் கடல் மற்றும் தைவான் ஜலசந்தியில் உள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்று சீனாவின் புவிசார் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்திய எல்லை பகுதிகளிலும் சீனா தனது ஆக்கிரப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்கிறது.
இப்படி இந்திய பசிபிக் மண்டலத்தில் சீனாவின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ,தற்போது நடைபெற்றிருக்கும் சீனா-ரஷ்யா கூட்டு கடற்படை போர் பயிற்சிகள் , உலக நாடுகளுக்கு அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
இதற்கிடையே பனிப்போருக்குப் பிறகு முதல் முறையாக ஜெர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2026ம் ஆண்டு முதல் ஜெர்மனியில் அணுசக்தி அல்லாத Tomahawk க்ரூஸ், SM-6 மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்க நிலைநிறுத்தும் முடிவை ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வரவேற்றிருக்கிறார்.
அதே நேரத்தில், ஜெர்மனிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கும் ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ராணுவரீதியாக ரஷ்யா பதிலளிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
ரஷ்ய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் கூடிய இத்தகைய நடவடிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மூன்றாம் உலகப் போருக்கு அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தயாராகி விட்டதையே இது காட்டுவதாக சொல்லப் படுகிறது.
இஸ்ரேல் – காசா போர் மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் சீனாவும், ரஷ்யாவும் இணைந்து மேற்கத்திய நாடுகளை எதிர்க்க முடிவெடுத்துள்ளன.
மூன்றாம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை என்று புவிசார் அரசியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.