உத்திரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள உணவகங்களில் பெயர் பலகைகளில் உரிமையாளர் பெயர், தொலைபேசி எண்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்ற அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான பின்னணி என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
கன்வர் என்றால் இளவரசன் மற்றும் காவடி என்று பொருள். வட மாநிலங்களில், சிவபெருமானின் அருளைப் பெறுவதற்காக, ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை மேற்கொள்வார்கள்.
முதல் கன்வர் யாத்திரையை இராவணன் தொடங்கி வைத்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. இராவணன் காவடி சுமந்து, அதில் கங்கை நீரைக் கொண்டுவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான் என்றும், அதன் தொடர்ச்சியாகவே இன்றும் இந்த கன்வர் யாத்திரை நடந்து வருகிறது.
கன்வர் யாத்திரையின் போது மூங்கிலால் ஆன காவடியை இரு தோள்களிலும் சிவ பக்தர்கள் சுமந்து செல்வார்கள். காவடியின் இரு முனைகளிலும் இரண்டு வண்ணமயமான களிமண் பானைகள் இணைக்கப் பட்டிருக்கும்.
கன்வர் யாத்திரை என்பது ஒரு மாத கால விழாவாகும். இதில் சிவபக்தர்கள்,காவி உடை அணிந்து , வெறுங்காலுடன், புனித தலங்களில் இருந்து கங்கை நீரை சேகரிக்கின்றனர்.
அதன் பிறகு, தங்கள் சொந்த ஊருக்குச் சென்று, அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் “அபிஷேகம்” செய்து வழிபாடு செய்கிறார்கள். வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நன்றியின் வெளிப்பாடாக இந்த யாத்திரை கருதப்படுகிறது.
கன்வர் யாத்திரையின் போது, காவடியில் உள்ள களிமண் பானைகள் தரையில் படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானதாக கருதப் படுகிறது.
இந்த ஆண்டு கன்வர் யாத்திரை, 22 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சிவராத்திரி அன்று முடிவடைகிறது.
இந்த நிலையில், உத்திரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள உணவகங்களில் பெயர் பலகைகளில், அதன் உரிமையாளர் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்ற அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ஓட்டல்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.
கடைகளின் பெயர் பலகைகளில், கடையின் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை எழுதவேண்டும் என்ற சட்டம் முசாபர்நகரில் மட்டுமே அமலில் இருந்து வந்தது. கன்வர் யாத்திரை தொடர்பான இந்த அரசின் உத்தரவால் பெரும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
வாடிக்கையாளர்கள் தாங்கள் யாருடைய தொழிலை வாங்குகிறோம் என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதில் குழப்பம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பிறப்பித்திருக்கிறது. மேலும் , கன்வர் யாத்திரை வழிகளில், ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
இது, கடுமையான உணவு விதிகளைப் பின்பற்றும் சிவ பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவற்றை பாதுகாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்று உத்தர பிரதேச அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான உத்தரவு என ஆரம்பித்தது, மாநில அளவிலான ஒழுங்காக மாறியது. மேலும் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் எல்லையையும் தாண்டி உள்ளது.
இப்போது ஹரித்துவாரிலும் கன்வர் யாத்திரை செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களும் தங்கள் பெயர்களை கடை பலகைகளில் எழுதி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி , யாரையும் குறிவைத்து இந்த முடிவு எடுக்கப் படவில்லை என்றும், சிலர் தங்கள் அடையாளத்தை மறைத்து உணவகங்களை நடத்திவருவதால், அதன் காரணமாக மோதல்கள் ஏற்படுகின்றன என்றும், அதனை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளன என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தேசிய தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி, யோகி ஆதித்யநாத் அரசின் முடிவை வரவேற்றிருக்கிறார். மேலும் கன்வர் யாத்திரை ஒரு மதப் பயணம், அதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான மோதலை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு எடுத்த இந்த நல்ல முடிவை பாராட்டுவதாக ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்திருக்கிறார்.
யோகி அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான குற்றமாகும் என்று விமர்சனம் செய்துளளர். இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் ஜாதி மத்தின் பெயரால் எந்தொரு பிளவையும், ஆதரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
உத்தரபிரதேச அரசின் உத்தரவு ஒரு சமூக குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர், அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்திருக்கிறார்.
கன்வர் யாத்திரை தொடர்பான சர்ச்சைகள், எழுந்துள்ள நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், கன்வர் யாத்திரைக்கான பாதைகளை ஆய்வு செய்வதிலும், பக்தர்களுக்கான வசதிகள், மருத்துவ சேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பதிலும் மும்முரமாக இருக்கிறார்.