தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் இந்த திருக்கோயில் மயானத்தில் அமைந்திருக்கிறது. தர்ம தேவதையாக விளங்கும் அம்மன் அருள் புரியும் அற்புதத் திருக்கோயிலைப் பற்றி பார்க்கலாம்
பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் ஆனை மலை பகுதியில் இந்த திருக்கோயில் அமைந்திருக்கிறது.
மயானத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் அம்மன் மாசாணியம்மன் என்று அழைக்கப் படுகிறாள் .
மயான சயனி என்பது காலப் போக்கில் மாசாணியம்மன் என்றாகி விட்டது.
தாடகை வதம் செய்ய பராசக்தியை வேண்டுகிறார் ஸ்ரீராமபிரான். தன்னை மயான மண்ணில் செய்து வழிபட்டு சென்றால் தாடகை வதம் முடியும் என்று பராசக்தி அருளுகிறாள். அம்மை சொன்னது போலவே ஸ்ரீ ராமபிரான் உப்பாற்றின் வடகரையில் இருந்த மயானத்திலிருந்த மண்ணை எடுத்து அம்பிகை திருமேனியை உருவாக்கினார். திருவடியில் மகுடாசுரன் என்னும் அரக்கனை மிதித்த நிலையில் வடிவமைத்த அம்மனை ஸ்ரீ ராமபிரான் ஆகமவிதிப்படி பூஜை செய்து வழிபட்டார்.
விதிப்படி பூஜை செய்த ஸ்ரீ ராம பிரானின் முன் மயான ருத்திரியாக தோன்றிய ஆதி பராசக்தி வரமளித்தது மறைந்தாள் என்கிறது இந்த திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது.
இன்றும் இந்த கோயிலில் அருள்பாலிக்கும் மாசாணி யம்மன் ஸ்ரீ ராமபிரான் தன் திருக்கரங்களால் வடிவமைத்த அம்மனாகும்.
இத்திருக்கோயிலில் அம்மன், 17 அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலைவைத்து ,கிழக்கு நோக்கி பாதங்களை நீட்டி சயனித்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்மனின் கால் மாட்டில் மகுடேஸ்வரன் என்ற அரக்கனின் உருவமும் , அடுத்து இரண்டடி உயரத்தில் மாசாணியம்மனின் திருமேனியும் அமைந்திருக்கிறது. இது மற்ற அம்மன் திருக்கோயில்களில் கணக்கு கிடைக்காத அற்புத வடிவமாகும் .
மாசாணியம்மனுக்கு, செவ்வரளி மாலை, எலுமிச்சை மாலை சார்த்தி ,நெய் தீபம் ஏற்றி வணங்கினால் உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் நீங்கிவிடுகிறது என்கிறார்கள் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள். தீமிதித்தும் பால் குடம் எடுத்தும், பக்தர்கள் மாசாணியம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
குழந்தை பேறு கிடைக்காதவர்கள் இக்கோயிலுக்கு வந்து, மாசாணியம்மன் கோயிலில், பிரசாதமாக தரும் பச்சியம் மருந்தைச் சாப்பிட்டால், தீவினை நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும் சொல்கிறார்கள்.
பக்தர்கள் தங்கள் குறைகளை தாளில் எழுதி அம்மன் திருவடியில் வைத்து வணங்கி வந்தால் , குறைகள் உடனடியாக தீர்ந்து விடும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலில் லிங்க வடிவில் ஒரு நீதிக் கல் இருக்கிறது . இந்த லிங்கத்தில் தனக்கு நீதிவேண்டும் என்று வேண்டிக் கொண்டு , மிளகாயை அரைத்து பூசினால் நியாயம் கிடைக்கிறது என்று சொல்லப் படுகிறது. எனவே மக்கள் கிலோ கணக்கில் மிளகாய் அரைத்து இந்த லிங்கத்தில் பூசி, நியாயம் பெற்று செல்கின்றனர்.
அமாவாசை நாட்களில், வெள்ளிக்கிழமைகளில்,செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் ஈரத்துணியுடன் அம்மனை வளம் வந்து வணங்கிவிட்டு, இந்த லிங்கத்தில் மிளகாய் அரைத்து பூசுகின்றனர்.
மூன்று மாதத்தில் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து, இந்த லிங்கத்துக்கு எண்ணெய் காப்பு சார்த்தி நன்றி தெரிவித்து செல்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களிலும் , அனைத்து பௌர்ணமி நாட்களிலும் மற்றும் ஆடி மாத பூரம் நட்சத்திர நாளிலும், ஆடி பெருக்கு புண்ணிய நாளிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தந்தே தீரும் மாசாணியம்மன் திருக்கோயில்
பில்லி சூனியம் ஏவல் எந்திரம் போன்ற மாந்திரீகப் பிரச்சனைகளுக்கு , இந்தக்கோயில் ஓர் சிறந்த பரிகார கோயிலாக விளங்குகிறது என்றால் மிகையில்லை.