ஆந்திர மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, நடப்பு நிதியாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநிலத்தின் மூலதனத்தின் தேவையை உணர்ந்து, சிறப்பு நிதி உதவியை எளிதாக்குவோம் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தின் மறுசீரமைப்பு சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் நடப்பு நிதியாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான காலக் கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திராவில் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் போலவரம் பாசனத் திட்டத்தை விரைவில் முடிக்கவும், நிதியுதவி செய்யவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.