மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும் பகுதி, ‘கவச்’ உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 795 கோடி ரூபாய் நிதி, சிக்னல் மேம்பாடு, மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் கட்டுமானம், ‘கவச்’ அமைப்பு நிறுவுதல் போன்ற பாதுகாப்பு தொடா்பான நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக கவச் அமைப்பை நிறுவுவதற்கு ரயில்வே முன்னுரிமை அளிப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் ரயில்வே துறைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ், நடப்பாண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.