சார்தாம் திட்ட சாலைப் பணிகளில் 616 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ள அவர்,
போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இமயமலைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக, புவியியல், புவித் தொழில்நுட்பம், நீரியியல் மற்றும் இடவியல் சூழல்களை மதிப்பீடு செய்த பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
சார்தாம் எனப்படும், யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு வழிப்பாட்டுத் தலங்களுகளை இணைக்கக் கூடிய சாலைகளும், கைலாஷ் – மான்சரோவர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள தனக்பூர் முதல் பித்தோரகர் வரையிலான சாலை உள்ளிட்ட தற்போதுள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த சார்தாம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மொத்தம் 825 கிலோ மீட்டர் நீளமுள்ள இச்சாலையில், 616 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.