மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் சில சலுகைகள் அளிக்கப்பட்டதன் மூலம் யாருக்கு எவ்வளவு லாபம் என்பதை தற்போது பார்க்கலாம்.
புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனிநபர்களுக்கு அளிக்கப்படும் நிரந்தர கழிவு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையால் வரிசெலுத்துவோர் தங்கள் பணத்தில் மிச்சம் பிடித்து லாபம் பார்க்கலாம். வருமான வரி சட்டம் 1961 பிரிவு 87-ஏ-இன்கீழ் புதிய வரி விகிதத்தில் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை.
தற்போது நிரந்தர கழிவு 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டதால், 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை.
இதற்கு முன்பு 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமானம் இருந்தால் நிரந்தர கழிவு போக 7 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வரி செலுத்த வேண்டும். அவர் 28 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்தியிருப்பார். தற்போது நிரந்தர கழிவின் அதிகரிப்பால் 7 லட்ச ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டும். 7 லட்ச ரூபாய் வரை வரி இல்லை என்பதால், 28 ஆயிரத்து 600 ரூபாய் லாபம் கிடைக்கும். வரி செலுத்துவோர் இந்தப் பணத்தை மிச்சம்பிடிக்க முடியும்.
8 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் முன்பு 31 ஆயிரத்து 200 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். தற்போது 23 ஆயிரத்து 400 ரூபாய் வரி செலுத்தினால் போதுமானது. இதன்மூலம் 7 ஆயிரத்து 800 ரூபாய் மிச்சமாகும்.
10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 54 ஆயிரத்து 600 ரூபாய் வரி செலுத்தி இருப்பார். இனி 44 ஆயிரத்து 200 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதன்மூலம் 10 ஆயிரத்து 400 ரூபாய் சேமிக்க முடியும்.
15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் முன்பு வரி செலுத்த வேண்டும். தற்போது ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தினால் போதுமானது. இதனால் 15 ஆயிரத்து 600 ரூபாய் மிச்சமாகும்.
25 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் முன்பு 4 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாயும், தற்போது 4 லட்சத்து 34 ஆயிரத்து 200 ரூபாய் மட்டும் வரி செலுத்தினால் போதும். அதே போல், 50 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 12 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாயும் வரி செலுத்தப்பட்டு வந்தது. புதிய முறையில் முறையே 12 லட்சத்து 14 ஆயிரத்து 200 ரூபாயும் வரி செலுத்தினால் போதும். இதன் மூலம் 18 ஆயிரத்து 200 ரூபாய் மிச்சம் பிடிக்க முடியும்.
((வருமானம் நிரந்தர கழிவுக்கு முன் நிரந்தர கழிவுக்கு பின் சேமிப்பு))
ரூ.7.75 லட்சத்துக்கு மேல் ரூ.28,600 ——— ரூ.28,600
ரூ.8 லட்சத்துக்கு மேல் ரூ.31,200 ரூ.23,400 ரூ.7,800
ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.54,600 ரூ.44,200 ரூ.10,400
ரூ.15 லட்சத்துக்கு மேல் ரூ.1,45,600 ரூ.1,30,000 ரூ.15,600
ரூ.25 லட்சத்துக்கு மேல் ரூ.4,52,400 ரூ.4,34,200 ரூ.18,200
ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.12,32,400 ரூ.12,14,200 ரூ.18,200