இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்தவித நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை என்றும், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் பணமாக்குதல் நடவடிக்கை மூலம் ரூ.15,700 கோடி வங்கிக் கடனை முன்கூட்டியே செலுத்தியுள்ளது என்றும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், கடந்த நிதியாண்டில் ரூ.6,350 கோடியும், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.9,350 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
2017-ம் ஆண்டில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தை செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆணையை மேம்படுத்தியது. இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அதிகாரம் அளிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அரசு அளித்த ஒப்புதலுக்கு இணங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடன் பெற்றது.
சுங்கச்சாவடி வருவாய், சொத்து பணமாக்குதல் ஆகியவற்றின் மேம்பட்ட வரத்து மூலம் கடனை ஈடுசெய்ய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை பயன்முறை மூலம் திரட்டப்பட்ட தொகை கடன் திருப்பிச் செலுத்துவதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது.
2023-24 நிதியாண்டு முதல் நிதி திரட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை இந்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. இதனால், கடன் குறைப்பு தொடங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.1,07,504 கோடி செலவில் 9,984 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,055 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் 1,18,894 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.