இந்தியாவின் முதல் சர்வதேச நிதி தொழில்நுட்ப ஸ்மார்ட் சிட்டி குஜராத்தில் உருவாகி வருகிறது. GIFT City என்ற பெயரில் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த நிதி நகரம், இந்தியாவை நிதி வல்லரசாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
குஜராத் மாநில முதல்வராக பிரதமர் மோடி இருந்த காலத்தில் , கோத்ரா வன்முறைக்கு பிறகு ஓராண்டு கழித்து 2003ம் ஆண்டு முதல் வைப்ரன்ட் குஜராத் என்ற உச்சி மாநாடு தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
வைப்ரன்ட் குஜராத்தின் முக்கிய திட்டம் தான் இந்தியாவை ஆசியாவின் நிதி மையமாக மாற்றும் GIFT City Project திட்டம். GIFT City என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள திட்டமிடப்பட்ட வணிக மாவட்டமாகும்.
இது நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயல்பாடுகளுக்கு போட்டித்தன்மையை வழங்கும் புதிய வணிக இலக்கு கொண்டதாகும்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 20 நிமிடத்தில் இந்த GIFT City-க்கு சென்று விட முடியும். கிட்டத்தட்ட 886 ஏக்கரில் 70,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவின் முதல் சர்வதேச நிதி தொழில்நுட்ப ஸ்மார்ட் சிட்டியாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த GIFT City திட்டம், பிரதமர் மோடியின் செல்லப் பிள்ளை திட்டம் என்று சொல்லப் படுகிறது . குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி அல்லது கிஃப்ட் சிட்டி, இந்தியாவின் பளபளப்பான புதிய நிதி வணிக மையமாக அமைந்திருக்கிறது.
இந்தியாவின் முதல் கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் சிட்டி மற்றும் சர்வதேச நிதிச் சேவை மையமாக (IFSC) இந்த GIFT City உலகையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
GIFT City-ல் சுமார் 261 ஏக்கர் சிறப்பு பொருளாதார மண்டல பகுதி என்றும், 625 ஏக்கர் DTA என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சுமார் 62 மில்லியன் சதுர அடி கட்டப்பட்ட பகுதி உருவாக்கப்படும் மற்றும் அதில் 67 சதவீதம் வணிக இடமாகவும், 22 சதவீதம் குடியிருப்பு இடமாகவும், 11 சதவீதம் சமூக இடமாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் முதல் உலகளாவிய புல்லியன் எக்ஸ்சேஞ்ச், இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (IIBX), பிரதமர் மோடியால் GIFT சிட்டியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நிதிச் சேவை மையம், இந்தியாவில் தங்க வர்த்தகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்கான மத்திய அரசின் தேர்ந்த முயற்சியாக பாராட்டப்படுகிறது. GIFT City-யின் கட்டுமானப் பணிகள் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
GIFT சிட்டியில் வங்கி, நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ITES, fintech, மூலதனச் சந்தை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல்ஸ், இன்ஜினியரிங், மருந்து, இ-காமர்ஸ், கப்பல் மற்றும் விமானம் குத்தகை, மற்றும் துணை சேவைகள் வழங்கும் நிறுவனங்களும் இடம் பிடித்துள்ளன.
கிஃப்ட் சிட்டியில் ஆரக்கிள், பாங்க் ஆஃப் அமெரிக்கா, சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ் சட்ட நிறுவனம், சிட்டி பேங்க், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஒரு கமாடிட்டி பங்கு சந்தையும் மற்றும் ஒரு தங்கம் பரிமாற்ற சந்தையும் அமைந்துள்ளது.
23 சர்வதேச வங்கிகள், 35 சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இரண்டு சர்வதேச பங்குச் சந்தைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் DOMESTIC TARIFF AREA என்று அழைக்கப்படும் பகுதியில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தங்கத்தின் இரண்டாவது பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே இந்தியாவில் தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும்.
இந்நிலையில், உலக தங்கச் சந்தையில் இந்தியா முன்னேறுவதற்கு இந்த கிஃப்ட் சிட்டி உதவும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
தற்போது சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை, கிஃப்ட் சிட்டியில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம் (IFSCA) கட்டுப்பாட்டாளராக இருந்து கண்காணிக்கும்.
IFSCA ஆனது விமானம் மற்றும் கப்பல் குத்தகை, மூலதன சந்தைகள், கடல் வங்கி மற்றும் சொத்து மேலாண்மை, கடல் காப்பீடு மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் தொடர்பான சேவைகளையும் வழங்கும் . இரண்டு சர்வதேச பங்குச் சந்தைகளைக் கொண்டுள்ள சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம் சராசரியாக ஒரு நாளைக்கு 11 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வர்த்தகத்தை செய்கின்றன.
IFSCA முறையான அந்தஸ்தைப் பெற்றதிலிருந்து, இரண்டு ஆண்டுகளில் HDFC வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, HSBC, Bank of America, Axis Bank மற்றும் Standard Chartered உட்பட கிட்டத்தட்ட இரண்டு டஜன் வங்கிகள் கிஃப்ட் சிட்டிக்கு வந்து விட்டனர்.
கற்பனைக்கு எட்டாத ஒரு தன்னம்பிக்கை நகரத்தை உருவாக்குவதே கிஃப்ட் சிட்டியின் பின்னால் இருக்கும் நோக்கம். துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகளாவிய நிதி மையங்களுடன் போட்டியிடுவதற்காகவே இந்த GIFT சிட்டி அமைக்கப்பட்டு வருகிறது .
வங்கி, முதலீட்டு நிதி நிறுவனங்களுக்கான நிதி மையமாக கட்டமைக்கப்படும் GIFT City, மும்பையைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் உள்ளது.
GIFT City-யில் 5 லட்சத்துக்கும் மேலாக நேரடி வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்றும், மறைமுக வேலை வாய்ப்புக்களும் 5 லட்சத்துக்கும் மேலாக உருவாகும் என்று கூறப்படுகிறது .
உள்கட்டமைப்பு அடிப்படையில் உலகளாவிய குறியீட்டு எண் பட்டியலில் GIFT சிட்டி 62 -வது இடத்தில் உள்ளது. இதே பட்டியலில் மும்பை 66வது இடத்தில் இருக்கிறது.
2013-ம் ஆண்டு பிரதமர் மோடி, GIFT சிட்டியின் உள்கட்டமைப்பைத் தொடங்கிவைத்தபோது – வழக்கம் போல் இது தோல்வியடையும் என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் கிஃப்ட் சிட்டி முதலாளித்துவ குஜராத் மாடல் என்று கேலியும் செய்திருந்தனர். அதன் பிறகு 10 வருடங்கள் கடந்துவிட்டன.
சர்வதேச நிதி மண்டலங்களுக்கு இணையாக உலகளாவிய நிதி மையமாக மாறுவதை சந்தை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த “கிஃப்ட் சிட்டி” ஆசியாவின் நிதிச் சேவைகளில் கேம்-சேஞ்சராக இருக்கிறது.
GIFT City இந்தியாவை நிதி வல்லரசாக மாற்ற உதவும் என்று பிரதமர் மோடி சொன்னது பலித்து கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.