காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கும் 272 கிலோமீட்டர் நீளமுள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
USBRL திட்டம் என்பது இந்தியாவின் வடக்குப் பகுதியை பரந்த இந்திய இரயில் வலையமைப்புடன் இணைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு முயற்சியாகும்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணிநேரத்தில் இருந்து வெறும் 6 மணிநேரமாக குறைப்பதற்காகவும், நம்பகமான மற்றும் திறமையான இரயில் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காகவும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டம் கொண்டுவரப்பட்டது.
யுஎஸ்பிஆர்எல் திட்டத்தில் மொத்தம் 119 கிலோமீட்டர் நீளம் கொண்ட 38 சுரங்கப்பாதைகள் உள்ளன. இதில், 12.75 கிலோமீட்டர் நீளம் கொண்ட நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையான டன்னல் டி-49ம் ஒன்றாகும்.
இந்த திட்டத்தில் 927 பாலங்கள் 13 கிலோமீட்டர் நீளம் கொண்டவையாக உள்ளன. இவற்றில் முக்கியமாக செனாப் பாலம், 1,315 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 467 மீட்டர் வளைவைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
மேலும் ஆற்றிலிருந்து இருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த செனாப் பாலம் ஈபிள் கோபுரத்தை விடவும் உயரமானதாகும்.
மேலும், உலகின் மிக உயரமான வளைவு ரயில் பாலத்தை விடவும் 35 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக இந்த செனாப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றையும், அதிதீவிரம் கொண்ட பூகம்பங்களைத் தாங்கும் வகையில் இந்த செனாப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இரும்பினால் கட்டப்பட்ட ஒரு இந்திய பொறியியல் அதிசயம் செனாப் பாலம் என்று உலகமே வியக்கிறது.
ஏற்கெனவே, இத்திட்டத்தின் 272 கிலோமீட்டர் நீளத்தில், 161 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் இயங்கத் தொடங்கி விட்டன.
தற்போது கன்னியாகுமரியில் இருந்து கத்ரா வரையிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாரமுல்லாவில் இருந்து சங்கல்தான் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சங்கல்டன் மற்றும் ரியாசி இடையேயான பாதை தற்போது தயாராக உள்ள நிலையில், இதில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரியாசியில் இருந்து பாரமுல்லா வரை ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தான் மற்றும் ரியாசி இடையே மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது வடக்கு ரயில்வே துறை.
இத்திட்டத்தில், மீதமுள்ள 111 கிலோமீட்டர் நீளமுள்ள கத்ரா-பனிஹால் பிரிவில், புவியியல், நிலப்பரப்பு மற்றும் வானிலை சார்ந்த அனைத்து சவால்களையும் மீறி 95 சதவீதம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
USBRL திட்டத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், கத்ரா மற்றும் ரியாசி இடையே 3.2 கிலோமீட்டர் சுரங்கப்பாதை உள்ளிட்ட மீதமுள்ள பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வரும் டிசம்பர் மாதத்துக்கு முன், மொத்த பணிகளும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருக்கிறார்.
மேலும் 2009-2014 க்கு இடைப்பட்ட காலத்தில் இரயில்வே துறைக்கான ஒதுக்கீடு, பிரதமர் மோடி ஆட்சியில் 3.5 மடங்கு அதிகரித்து கொண்டே வந்தது. நடப்பு நிதியாண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 3694 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது 2009-2014 இன் சராசரியை ஒதுக்கீட்டை விட சுமார் 254 சதவீதம் அதிகம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.