33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாகத் தொடங்கியது.
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 329 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். தொடக்க விழா நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கியது. ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது நடைபெற்ற வாணவேடிக்கை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
வீரர்களின் அணிவகுப்பு புகழ் பெற்ற ‘சென்’ ஆற்றில் நடைபெற்றது.
டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் மற்றும் பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் படகுகளில் உற்சாகமாக அணிவகுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இங்கிலாந்து பிரதமர் ஸ்டாமர், ஜெர்மன் பிரதமர் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவையொட்டி பாரிஸ் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.