33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கிய நிலையில் மர்ம நபர்களின் நாச வேலை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறும் போட்டியில், 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங் உள்ளிட்ட 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவை பொருத்தவரை 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மர்ம நபர்களின் நாசவேலை காரணமாக பாரிசில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.