அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டுமென அவரது கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்தது. அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளருக்கான வேட்புமனுவில் தான் கையெழுத்திட்டதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒவ்வொரு வாக்கையும் பெற கடினமாக உழைப்பேன் எனத் தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் தங்களது கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















