நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவறான தகவலை பரப்புவதாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தாம் பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், ஒரு மாநில முதல்வரை பேச அனுமதிக்கவில்லை என்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி திட்டமிட்டு வெளிநடப்பு செய்ததாக அதீர் ரஞ்சன் செளத்ரி குற்றம்சாட்டினார். தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு நிலவரம் கேள்விக்குறியாகி இருப்பதால், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிடுமாறு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.