51 சக்தி பீடங்களில் தமிழகத்தில் மட்டும் 18 சக்தி பீடங்கள் உள்ளன. அவற்றில், வெற்றியைத் தரும் வீர சக்தி பீடம் பற்றி இப்போது பார்க்கலாம்.
ராவணனுடன் போர் புரிவதற்கு இலங்கை செல்லும் முன் ஸ்ரீ இராமபிரான், தம்பி லட்சுமணன், மற்றும் அனுமனுடன் இராமநாதபுரம் தேவி பட்டினத்தில் உள்ள உப்பூர் விநாயகரை தரிசித்துவிட்டு, இங்கே வந்து தங்கி இருந்ததாகவும், வீரசக்தி பீடத்தில் உள்ள உலக நாயகி அம்மனை வணங்கி ஆசி பெற்று சென்று போரில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் முதலில் உலக மகா தேவி பட்டினம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த ஊர் ‘தேவிபட்டினம்’ என்று மருவியதாக தெரிவிக்கின்றனர்.
இராமநாதபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள தேவி பட்டினம் கடற்கரை ஓரத்தில் மிக அமைதியான சூழலில் கிழக்கு நோக்கி இந்தக் கோயில் அமைந்துள்ளது.
ஐந்து நிலைகளுடன் ஏழு கலசங்களுடன் கூடிய பிரமாண்டமாக இராஜ கோபுரத்துடன் விளங்கும் இக்கோயிலின் மூலவர் சந்நிதிக்கு மேல் ஏகதள விமானம் அமைந்துள்ளது.
மகிஷாசுரமர்த்தினி என்ற உலகநாயகி அம்மனுக்கு எதிரே பலிபீடம், கொடிமரம் சிம்ம வாகனம் உள்ளன. பதினாறு கால் மண்டபத்தில் மேற்புறத்தில் இருபுறங்களிலும் சிம்மம் வடிவம் இருக்க அம்மன் வீற்றிருந்த கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. அடுத்துள்ள கருங்கல்லான பதினாறு கால் மகாமண்டபம் அதற்கடுத்து அர்த்தமண்டபம் தாண்டி சென்றால், கருவறையில் உலகநாயகி அம்மன் அருட்பாலிக்கிறாள்.
விநாயகர், சுப்பிரமணியர், நாகர் உள்ளிட்ட சந்நதிகள் இருக்கும் இக்கோயிலுக்கு எதிரில் சர்க்கரை தீர்த்தம் அமைந்திருக்கிறது.
படைக்கும் தெய்வமான பிரம்மாவை நோக்கி கடும் தவம் இருந்த மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு நேரில் காட்சி அளித்தார் பிரம்மா. மகிஷாசுரனின் தவத்துக்கு இரங்கிய பிரம்மா என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். மகிஷாசுரன் தமக்கு மரணமில்லாத வரத்தை தருமாறு கேட்டான். உலகில் பிறந்த அனைவரும் இறப்பது நிச்சயம் என்றும், அதனால் வேறு ஏதாவது வரம் கேட்கும் படி பிரம்மா கூறினார்.
உடனே, மகிஷாசுரன் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தை வேண்டிப் பெற்றுக்கொண்டான்.
உலகில் எந்த பெண்ணுக்கும் தன்னைக் கொல்லும் வல்லமை கிடையாது . எனவே தம்மை யாராலும் அழிக்க முடியாது என்பதால் மகிஷாசுரனுக்கு ஆணவம் தலைக்கேறியது. தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்த தொடங்கினான். மகிஷாசுரனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பம் அடைந்தனர். எல்லை கடந்த துன்பத்தைத் தாங்க மாட்டாத தேவர்கள் அனைவரும் பிரம்மாவின் ஆலோசனைபடி சிவபெருமானிடம் சென்று முறையிட்டு அழுதனர்.
ஒரு பெண்ணால் தான் மகிஷாசுரனின் அழிவு என்பதால், சிவபெருமான் அம்மையைக் கொண்டு அசுரனை அழிக்க சங்கல்பம் செய்தார்.
பராசக்திக்கு சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் சிவபெருமான் கொடுத்தார்.
மேலும், கத்தி மற்றும் கேடயத்தை காலனும், தாமரை மலரை சமுத்திரமும்,பாண பாத்திரத்தை குபேரனும் , கிரணங்களைச் சூரியனும், நாகபரணத்தை ஆதிஷேனும் பராசக்திக்கு வழங்கினார்கள்.
சர்வ வல்லமை படைத்த பராசக்தி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி, சிம்ம வாகனத்தில் சென்று மகிஷாசுரனை வதம் செய்தருளினாள். இந்த அற்புத செயலாலே பராசக்தி மகிஷாசுரமர்த்தினி என்ற போற்றப் படுகிறாள்.
மகிஷாசுரனை வதம் செய்த பிறகு தனது ஆக்ரோஷம் குறைந்து, சாந்த சொரூபியாக சுயம்பு வடிவில் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.
நவராத்திரி நாயகியான உலக நாயகி அம்மனை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
எதற்கெடுத்தாலும் அஞ்சி நடுங்குபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மையை வழிபட்டு சென்றால் சகல பயங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் , பௌர்ணமிகளில் சிறப்பு வழிபாடு செய்கிற வழக்கம் இன்றும் இருக்கிறது. மேலும் நவராத்திரி திருவிழாக்கள் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
நாமும் எடுத்த செயலில் வெற்றி பெற உலக நாயகி அம்மனை வணங்கி நல்லருள் பெறலாம்.