ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் என 10 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியான அறிவிப்பில் ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சந்தோஷ் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல அசாம் மாநிலத்தின் முன்னாள் எம்.பி. ராமன் தேகா சத்தீஸ்கர் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும், பாஜக தலைவருமான ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக, திரிபுராவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஜிஷ்ணு தேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டார்.
மூத்த பாஜக தலைவரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான ராஜஸ்தானை சேர்ந்த ஓ.பி.மாத்தூர் என்பவர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
கர்நாடகா முன்னாள் எம்.பி சி.எச்.விஜய்சங்கர், மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாசநாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவில் கூடுதல் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல, அசாம் ஆளுநரான இருந்த குலாப் சந்த் கட்டாரியா, இனி பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியுமாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் ஆளுநராக இருந்த லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும், அவரே மணிப்பூர் மாநிலத்திற்கு கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.