குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது.
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.