எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் டாடா நிறுவனத் தொழில்நுட்பத்துடன் இணைந்து, பிஎஸ்என்எல் நிறுவனம் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. சமீபத்தில், இந்த மூன்று நிறுவனங்களும் மொபைல் டேட்டா திட்ட விகிதங்களில் சராசரியாக 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தின. அதே நேரத்தில் BSNL இன் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது.
தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு, BSNL-க்கு புதிய சந்தாதாரர்களை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்தது.
கடந்த ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் மட்டும் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (MNP) சேவை மூலம் சுமார் 250,000 வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை BSNL க்கு பிற ஆபரேட்டர்களிடமிருந்து மாற்றியுள்ளனர். மேலும் இந்த காலகட்டத்தில் தங்களது நெட்வொர்க்கில் சுமார் 2.5 மில்லியன் புதிய இணைப்புகளைச் சேர்த்துள்ளதாகவும் BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் BSNL (BSNL) இணைந்து, இந்தியா முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 4G இணைய சேவைகளை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இதற்காக, டிசிஎஸ் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த சூழலில்தான், ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக, BSNL, எலான் மஸ்கின் Starlink மற்றும் Tata ஆகிய நிறுவனங்களின் ‘Triumvirate’ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் தகவல் தொடர்பு வணிகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை இந்த கூட்டமைப்பு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் இந்தியாவிற்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையத்தை கொண்டு வருவதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது.
அண்மையில், முக்கியமான குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் (ஜிஎம்பிசிஎஸ்) உரிமத்தை ஸ்டார்லிங்கிற்கு வழங்க DoT (தொலைத்தொடர்புத் துறை) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
வணிகச் சேவைகளைத் தொடர இன்னும் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு பல ஒழுங்குமுறை அனுமதிகள் தேவைப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டில் ஸ்டார்லிங்க் முதன்முதலில் உரிமத்திற்கு விண்ணப்பித்த பிறகு இது ஒரு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் Starlink-ன் செயற்கைக்கோள் இணையம் 300 Mbps வரை இணைய வேகத்தை வழங்க முடியும். இது மொபைல் இணையத்திற்கான 94.62 Mbps பதிவிறக்கம் மற்றும் 9.02 Mbps பதிவேற்ற வேகம் மற்றும் பிராட்பேண்டிற்கான சராசரியாக 58.62 Mbps பதிவிறக்கம் மற்றும் 50.42 Mbps பதிவேற்ற வேகத்தை விட மிக வேகமாக உள்ளது.
BSNL, எலான் மஸ்கின் Starlink மற்றும் Tata ஆகிய வை இணைந்து செயற்கை கோள் தொழில்நுட்பம் மூலம் மலிவான ரீசார்ஜ் திட்டங்களையும் சிறந்த கவரேஜையும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.