சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் உள்ள சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க குழந்தைகள், 21 வயதாகும் போது தானாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். அதனால், அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
செல்லுபடியாகும் விசாக்களுடன் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்து செல்லலாம். அதில் ஒரு வகை தான் H4 சார்பு விசா ஆகும்.
H1-B விசாவை வைத்திருக்கும் மனைவி அல்லது பெற்றோரால் இந்த H4 விசா ஸ்பான்சர் செய்யப்படுகிறது. ஸ்பான்சரின் விசா காலாவதியாகும் போது H4 விசா ரத்து செய்யப்படுகிறது.
H-1B விசா வைத்திருப்பவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வேலை செய்யவும் மற்றும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் அமெரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
மேலும், அமெரிக்க வங்கிகளில் கடன் போன்ற நிதிச் சேவைகளைப் பெறவும், வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவும், எந்த வகையான தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தவும், அரசு அனுமதி அளித்திருக்கிறது.
வேலை தேடுவதில் தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட பணியாற்றுவதற்கு தகுதியுடையவராக H4 விசா உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள்.
இப்படி DEPENDENT VISA வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த DEPENDENT VISA தான் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் தங்கள் குடும்பங்களை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதைச் சாத்தியமாக்குகிறது.
அமெரிக்காவில் வாழும் குழந்தைகள், 21 வயதை எட்டும் போது அந்த DEPENDENT VISA தானாக காலாவதி ஆகி விடும். அதற்குள் வேறு விசாவையோ, அல்லது நிரந்தர குடியுரிமையோ அந்த குழந்தை பெறவேண்டும்.
தொடர்ந்து, அமெரிக்காவில் குடியிருக்க புதிய நிலைக்கு மாறவில்லை என்றால், அந்த குழந்தைகளுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஏனெனில், அந்த குழந்தைகள் சார்ந்திருக்கும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் நிலையைத் தடுத்து விடுகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 2ஆம் தேதி வரை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தரவுகளை அமெரிக்கக் கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை ஆய்வு செய்தது.
அந்த அறிக்கையில், சுமார் 2,50,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சார்பு விசா உள்ளவர்கள் EB-1, EB-2, EB-3 க்ரீன் கார்டுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் , குடியேற்றம், குடியுரிமை மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான செனட் நீதித்துறை துணைக்குழுவின் தலைவர் செனட்டர் அலெக்ஸ் பாடில்லா மற்றும் டெபோரா ரோஸ் தலைமையிலான 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த தனிநபர்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஜோ பைடன் அரசை வலியுறுத்தி இருக்கிறது.
இந்த இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்காவில் வளர்ந்து, அமெரிக்காவில் பள்ளிக் கல்வியை முடித்து, அமெரிக்க பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.
இருப்பினும், நீண்ட காலமாக கிரீன் கார்டு கிடைக்காததன் காரணமாக, அமெரிக்காவை விட்டு நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.
இம்ப்ரூவ் தி ட்ரீம், என்ற அமைப்பினர், இந்தக் குழந்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 100க்கும் மேற்பட்ட அரசு நிர்வாக அலுவலகங்கள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து தீர்வுக்காக போராடி வருகிறது.
500,000 க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மற்றும் அமெரிக்காவில் அவர்கள் குடும்பங்கள் நிரந்தரமாக வாழவும் வழிவகை செய்து வருகிறோம் என்றும், ஆனால் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியரசுக் கட்சிதான் முட்டுக்கட்டை போடுவதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவிலேயே வளர்ந்த மற்றும் படித்த இளம் திறமைகளை மட்டும் இழக்கவில்லை, அவர்களுடன் சிறு வணிக உரிமையாளர்களாக அல்லது மருத்துவம், பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பல வருட நடைமுறை அனுபவமுள்ள அவர்களின் பெற்றோர்களையும் நாடு இழக்க போகிறது.
பொருளாதார ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் இந்திய அமெரிக்கர்களை நாடு கடத்தாமல் நிரந்தரக் குடியுரிமை வழங்குவது தான் நியாயமானது என்று இம்ப்ரூவ் தி ட்ரீமின் நிறுவனர் டிப் படேல் தெரிவித்துள் ளார்.