திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றும், நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்காதது மாநில நலனை புறக்கணிக்கும் செயல் என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியை மினிடாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்..
பழனி கோவிலில் நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் நீதிமன்ற உத்தரவை காரடம்காட்டி நகராட்சிக்கு சொந்தமான மற்ற பகுதிகளையும் திருக்கோவில் நிர்வாகம் கையகப்படுத்த நினைக்கிறது.
இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும் திருக்கோவில் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையோர வியாபாரிகள் பாதிக்காத வண்ணம், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது தமிழகத்தின் நலனை புறக்கணிப்பதாக உள்ளது என்றும், அவர் இந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம் மற்றும் ஜிஎஸ்டி கூட்டம் ஆகிய எதிலும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் ஒன்று இல்லை என்பதை வைத்து ஸ்டாலின் கூறுவது சரியல்ல.
இது அண்ணா, கலைஞர் போன்றவர்களின் திமுக கொள்கையில் இருந்து திராவிடமாடல் என்னும் பிரிவினைவாத கொள்கைக்கு ஸ்டாலின் மாறியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும், தமிழக ஆளுநரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும், இதே போல திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்த வேண்டுமென அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.