நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே மத்திய பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று தான் இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டம்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வாரம் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் பல திட்டங்களை அறிவித்தார். அவற்றில் மிக முக்கியமான திட்டம் , ஒரு கோடி இளைஞர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டமாகும்.
அதாவது , அடுத்த 5 ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்கும் திட்டமாகும்.
இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாற வேண்டுமானால் இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
தகுந்த திறமை கொண்டவர்கள் கிடைக்காமல் முதலாளிகள் ஒருபுறமும் திறமையை வளர்த்துக்கொள்ள போதிய பயிற்சி கிடைக்காத இளைஞர்கள் மறுபுறமும் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் விக்சித் பாரதத்தின் இலக்குகளை அடைய திறமைக்கும் வேலைவாய்ப்புக்கும் உள்ள இடைவெளியை இல்லாமல் ஆக்கவேண்டும். இதற்காகவே , இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப் பட்டுள்ளது.
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் , நாட்டில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக 5000 ரூபாயும் மற்றும் ஒரு முறை உதவித் தொகையாக 6000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டம் இரண்டு ஆண்டுகளுக்கும், இரண்டாம் கட்டம் மூன்று ஆண்டுகளுக்கும் இருக்கும்.
இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான செலவை நிறுவனங்கள் ஏற்கும் என்றும், அவர்களின் இன்டர்ன்ஷிப்பில் 10 சதவீதம் அவர்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியைச் செலவழிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது நிறுவனங்கள் இந்த திட்டத்தில் தீவிரமாக பங்கேற்க வழிவகை செய்கிறது.
இந்த திட்டத்தில் இணைய, ஆன்லைன் போர்ட்டல் மூலம் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதன் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள், இன்டெர்ன்ஷிப்பில் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்மையான பணி அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வுகளை வழங்க வேண்டும் என்றும், இன்டர்ன்ஷிப்பில் குறைந்தபட்சம் பாதி நேரமாவது வேலை செய்யும் சூழலில் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
உதவித்தொகையைப் பெறுவதன் மூலம், அடிப்படைச் செலவுகளைக் கவனித்துக்கொள்வதோடு தங்கள் திறன்களையும் இளைஞர்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது.
குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பயிற்சி, விலைமதிப்பற்ற நடைமுறை திறன்கள் மற்றும் தொழில்துறை நுண்ணறிவுகளை வழங்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் இளைஞர்கள் சிறந்த பணி அனுபவத்தையும் மற்றும் நிதி உதவியையும் பெறுகிறார்கள். நிறுவனங்கள் தங்கள் CSR கடமைகளை முறையாக நிறைவேற்றுகிறார்கள். மேலும், திறமையான மற்றும் வேலைவாய்ப்புக்கு உரிய இளைஞர்களை அரசு உருவாக்குகிறது.
அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளதாகவும், அதற்காக, 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
21 முதல் 24 வயதிற்குட்பட்ட வேலை கிடைக்காத மற்றும் முழுநேரப் படிப்பில் இல்லாதவர்கள் மட்டுமே இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு தகுதி பெறுகிறார்கள்.
இந்தியன் தொழில்நுட்பக் கழகம், இந்திய மேலாண்மை கழகம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் படிப்பை முடித்த இளைஞர்களுக்கு இந்த திட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.