தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் மாநில அரசிடம் இல்லையென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட தமிழக அரசு, நிகழ் கல்வியாண்டு தொடங்கிய போதிலும் அதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
அதற்கு மாறாக உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்புவதாக அந்த அறிக்கையில் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கடைகோடி மக்களும் பயன்பெறும் வகையில், பிரதான் மந்திரி உச்சதர் சிக்ஷா அபியான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு 12 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கிவைத்ததாகவும், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கல்வியின் தரத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அறிக்கையில் அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.
மாநிலங்களில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் பிரதான் மந்திரி உச்சதர் சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழக அரசு இன்னமும் இணையவில்லை என்பதை மத்திய அரசைக் கேள்வி கேட்கும் திமுக எம்.பி.க்கள் நினைவில்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதை விட ‘தான் என்னும் அகந்தைதான்’ தங்களுக்கு முக்கியமா என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.